தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
மருத்துவ பணியாளார் தேர்வு வாரியத்தின் மூலம் ஐந்தாயிரத்து 224 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முதற்கட்ட பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவிலியர்கள், ஆய்வக டெக்னீசியன்கள் உட்பட 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக அமைக்கப்பட உள்ள 9 மருத்துவக்கல்லூரிகளில் எட்டாயிரம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் முதன் முதலில் செவிலியராக தேர்வான தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கையான அன்புராஜ் என்கிற அன்புரூபிக்கு திருச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுவதற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
எஞ்சியுள்ள இரண்டாயிரத்து 721 செவிலியர்கள், ஆயிரத்து 782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத்துவ அலுவர்கள், 524 ஆய்வக டெக்னீசியன்கள், 77 இயன்முறை சிகிச்சையாளர்கள், 24 இளநிலை உதவியார்களுக்கு துறை வாரியாக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் செவிலியர்கள் மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை-முதலமைச்சர் வழங்கினார்.
சென்னை,